Wednesday, April 28, 2010

ஸ்பெக்ட்ரம்: சிபிஐ விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?- ஜெயலலிதா

சென்னை: ஐபிஎல் விவகாரத்தில் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா செய்யததைப் போல ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசாவும் பதவி நீக்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் குழுவின் கொச்சி உரிமை குறித்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் பெரும் சச்சரவுக்கு ஆளான மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூரின் நேர்மை குறித்த சந்தேகத்தையடுத்து, அவரை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

தரூரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், மிக உயர்ந்த ஜனநாயக மரபுப்படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்தார்.

தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ரூ. 60,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், தனக்கும், தன் உறவினர்களுக்கும், கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்திய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் அத்துமீறலையும், அராஜகத்தையும் இந்த நாட்டிற்கும், இந்திய அரசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.

ஐ.பி.எல். பங்குகளை விற்பனை செய்வதில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் சசி தரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ற்று. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தன்னுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ட்டு.

ஐ.பி.எல். பங்கு விற்பனை என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான தனியார் பிரச்சனை. மாறாக ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசாங்கத்தின், இந்திய மக்களின் சொத்து.

சசி தரூர் ஆற்றிய பணிக்கு, அவருடைய நண்பர் ரூ. 70 கோடி அளவுக்கு உரிமைதாரரிடமிருந்து பயனடைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், ராசாவால் இந்த நாட்டிற்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சித் தோழர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயனடைந்து இருப்பதாகவும் ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குடைய ஒருவர் தரூருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேர்மை வாய்ந்த கட்சிகள் சுமத்தியுள்ளன.

நாட்டின் முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் தரூர் அவமானப்படுத்தப்பட்டு, பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், ராசாவோ தொடர்ந்து மத்திய அமைச்சராக, அதுவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, எந்த இலாகாவுக்கு அமைச்சராக இருந்தாரோ, அதே இலாகாவுக்கான அமைச்சராகவே தொடர்ந்து இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய ரூ. 1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த அதிகாரி வினீத் அகர்வால் திடீரென்று மாற்றப்பட்டுவிட்டார் என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இதன் உள்நோக்கம் வெளிப்படையாக அனைவருக்கும் புரியக் கூடியது தான். மத்திய அரசு திமுகவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் குற்ற‌ம்ச‌ாட்டியதன் காரணமாகத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணை அவசியமாயிற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தவறான முறைகளை பின்பற்றியதன் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் அண்மையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு" என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படும் என்ற முறையை ராசா பின்பற்றியது “சினிமா டிக்கெட் விற்பனை” போன்று அமைந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமரின் அனுமதியை பெற்ற பிறகு தான் இந்த முரண்பாடுகள் நிறைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் எழுத்துப்பூர்வமான உத்தரவை ராசா வெளிப்படையாகவே மீறியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விடுவது குறித்து அமைச்சரவை அதிகாரக் குழுவின் முடிவிற்கு விட்டுவிடலாம் என்ற அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜின் ஆலோசனையையும் புறக்கணித்திருக்கிறார் ராசா.

நிர்ணயிக்கப்பட்ட தேதியை நியாயமின்றி, தன்னிச்சையாக முன்னுக்கு தள்ளி வைத்த தொலைத் தொடர்புத் துறையின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முடிவு சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்புத் துறையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

வலுவான ஆதாரங்கள் இருந்தும், ராசா பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரணை செய்து கொண்டு இருந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டுவிட்டார். எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ராசா மற்றும் அவரது சில கூட்டாளிகள், குறிப்பாக நோசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் நிரா ராடியா, ராசாவுடன் தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி பல புதிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததையும் சி.பி.ஐ. அடையாளம் கண்டிருப்பதாகவும்

ராசாவுக்கும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சிபிஐயால் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிரா ராடியா மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்து, இதன் மூலம், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து விலக்கி வைக்க சில சக்திகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை ராசாவுக்கும், அவரது ஆசான் கருணாநிதிக்கும் மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைமை விசித்திரமாக இருக்கிறது. ஐ.பி.எல். விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை லலித் மோடி எழுப்பிய போது, இணையமைச்சரை பலிகடா ஆக்கியது.

கூட்டணி என்று வரும் போது, கூட்டணிக் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது அதிகாரத்தை தியாகம் செய்யக்கூடிய நிலைக்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப்படுகிறது.

இது வெறும் 'பொது வாழ்வில் நேர்மை' குறித்த பிரச்சனை அல்ல. இந்த நாட்டிற்குச் சேர வேண்டிய சுமார் ரூ. 1 லட்சம் கோடியை கொள்ளையடித்த பிரச்சனை.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி வீடுகளை கட்டித் தருவதற்கு இந்தப் பணத்தை ஒதுக்கியிருக்கலாம்.

இந்த நாடே விலை போவதற்கு முன்பு, இந்த தேச சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சசி தரூரை ராஜினாமா செய்ய வைப்பதில் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சிகளும், ஐ.பி.எல். ஊழல் குறித்து விழிப்புடன் செயல்பட்ட ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

மத்திய அமைச்சராக உள்ள ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வினீத் அகர்வால் சி.பி.ஐ. விசாரணைக் குழுவின் தலைவராக திரும்ப பணியமர்த்தப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர் ஜெயலலிதா

thanks
thats tamil

0 comments: