Wednesday, April 28, 2010

ஸ்பெக்ட்ரம்: பெண் புரோக்கரின் தொலைபேசி ஒட்டு கேட்பு- ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கின?

டெல்லி: தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 2ஜி ஸ்பெட்க்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் 'பயோனீர்' நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி விவரம்:

பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகள் நடத்தி வரும் நிரா ராடியா என்ற பெண்ணின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், நோயெசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ், விட்காம் கன்சல்டிங், நியூகாம் கன்சல்டிங் என பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகளை நடத்தி வரும் இந்தப் பெண், மாபெரும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அரசு, அமைச்சர்களுடன் பல டீல்களை முடித்துக் கொடுத்து வருபவர் என்று தெரிகிறது.

இதற்காக தனது கன்சல்டிங் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு அதிகாரிகளைத் தான் பெருமாபாலும் பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் மூலம் அரசு திட்டங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்து, காய்களை நகர்த்தி காரியத்தை சாதிப்பவர் என்கிறார்கள்.

என்ஆர்ஐயான இந்த ரேடியா கடந்த 2000ம் ஆண்டில் தான் இந்தியாவுக்குத் திரும்பினார். வந்தவுடன் சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களுக்கு தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.

ராசாவால் 2ஜி தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுடன் ரேடியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து ரேடியாவின் தொலைபேசியை சிபிஐ சில காலமாக ஒட்டு கேட்டு வந்தது. இதன்மூலம் அவரது தில்லாலங்கடி வேலைகள் குறித்த விவரங்களும் ஆதாரங்களும் சிபிஐக்கு சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடியா விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியையும் சிபிஐ பெற்றுள்ளது. ரேடியாவின் 9 தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 120 நாட்கள் ஒட்டு கேட்டுள்ளது.

இதையடுத்து 2009ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 180 நாட்கள் இந்த தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் ஒட்டு கேட்டுள்ளனர்.

அதே போல மேலும் பல தொழிலதிபர்கள, அரசியல்வாதிகள், விளம்பர நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகளும் சிபிஐ, வருமான வரித்துறையால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறி்த்து ஏராளமான ஆதாரங்கள் சி்க்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த ஏராளமான பணம் ரியல் எஸ்டேட், நிறுவனங்கள், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளி்ல் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களும் இந்த ஒட்டு கேட்பு மூலம் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மிலாப் ஜெயினுக்கு சிபிஐ டிஐஜி வினீத் அகர்வால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஒட்டுக் கேட்பு மூலம் கிடைத்த முழுத் தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து ஜெயினின் உத்தரவுப்படி, நவம்பர் 20ம் தேதி வருமான வரித்துறையின் இணை இயக்குனர் அஷிஷ் அப்ரோல், சிபிஐ டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய பதிலில், நிரா ராடியாவுக்கும் அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் முழு விவரத்தையும் விளக்கியுள்ளார்.

அதில், நிரா ராடியா தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும்போது, தான் எப்படி பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கித் தந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

மேலும் அமைச்சர் ராசாவுடனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது அவரது தனிச் செயலாளரராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவுடனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறையின் ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வாங்க பெருமளவில் பணத்தை தயார் செய்து தந்ததாகவும் ரேடியா ஒருவரிடம் கூறியதாகவும் வருமான வரித்துறை சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

உள்துறைச் செயலாளரின் அனுமதியோடு தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்பதையும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஆனாலும் ரேடியாவை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசின் மிக மூத்த அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மேலும் தன்னை சிபிஐ கண்காணிப்பதை தனது தொடர்புகள் மூலம் உணர்ந்துவிட்ட நிரா ராடியா, கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக லண்டனுக்குச் சென்றுவிட்டார். கைதாவோம் என்ற அச்சத்தில் இதுவரை நாடு திரும்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு:

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

பாஜக, அதிமுக எம்பிக்கள் இந்த விவகாரத்தை இரு அவைகளிலும் கிளப்பிதால் பெரும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன

thanks thats tamil

0 comments: